தமிழ்நாடு

தலைமைக் காவலரை வெட்டியவரை தேடுவதில் போலீஸ் தீவிரம்

தலைமைக் காவலரை வெட்டியவரை தேடுவதில் போலீஸ் தீவிரம்

Rasus

சங்கரன்கோவிலில் தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மர்ம நபரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த சிவகுருசாமி மகன் மாரிமுத்து (40). இவர் முக்கூடல் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் ராஜபாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அவர், அங்கு இருந்த இரவு நேரக் கடையில் உணவு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் ஏதேதோ கூறி தகராறு செய்துள்ளார். பின்னர் திடீரென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இரவு 10 மணி வரை பரபரப்பாக இருக்கும் அந்த இடத்தில் இச்சம்பவம் நடந்ததால் அங்கு இருந்தவர்கள் பதறியடித்து ஓடியுள்ளனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடினார். பலத்த காயம் அடைந்த மாரிமுத்து சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் நகர காவல்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர் .தலைமைக் காவலர் மாரிமுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட (அமமுக) சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியனின் சகோதரர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.