தேசிய கொடியை ஏற்ற பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவருக்கு மறுப்பு தெரிவித்தது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தம். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ளார். இவரை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடக்கப்பள்ளியில் கொடியேற்ற தலைமை ஆசிரியர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்பேரில் சென்ற அவரை கொடியை ஏற்ற விடாமல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஹரிதாஸ் உள்ளிட்ட பஞ்சாயத்து அலுவல அதிகாரிகள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து புதிய தலைமுறை செய்தியாளர் எழில், அங்கு செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.
இதைப்பார்த்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எழிலை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து செல்போன்களை பிடுங்கி வைத்துள்ளனர். மேலும் எழிலையும் தாக்கியுள்ளனர். இதனால் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை பிடித்து சிறை வைத்து துன்புறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் வித்யா, மற்றும் எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது என பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறுகையில், “சம்பவம் தொடர்பாக நேற்று இரவுதான் தெரியவந்தது. கோட்டாட்சியர் மற்றும் எஸ்பியிடம் விசாரிக்க கூறியுள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.