பட்டியலின சிறுவன் மீது தாக்குதல் pt
தமிழ்நாடு

தருமபுரி | 17 வயது பட்டியலின சிறுவனை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது பட்டியலின சிறுவனை சாதி பெயரைச் சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

PT WEB

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தென்கரைக்கோட்டை அருகே உள்ள காந்திநகரை சேர்ந்த திருமால் என்பவரின் மகன் தருண் (17), அதேபகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான நெற்கதிர் அடிக்கும் வண்டியில் சில நாட்கள் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில் உறவினர் ஒருவர் வண்டி வாங்கியதால் அவரிடம் வேலைக்கு சென்றுவிடலாம் என்று வேலையை விட்டு நின்றுள்ளார்.

இதையறிந்த ராமக்கிருஷ்ணன், தருணை பற்றி தவறான முறையில் அவரது உறவினரிடம் கூறியதாகவும், இதுபற்றி தருணிடம் அவரது உறவினர் நேரடியாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டி வைத்து தாக்கிய கொடூரம்..

இதனையடுத்து தருண் மற்றும் அவரது நண்பர் இருவரும் தென்கரைக்கோட்டைக்கு செல்லும்போது ராமகிருஷ்ணனிடம், என்னைப் பற்றி தவறாக ஏன் சொன்னீர்கள் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ராமகிருஷ்ணன், சர்க்கரை ஆலை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வைத்து அடித்ததாகவும், சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது. இந்த தாக்குதலில் உடலில் காயங்களுடன், தருண் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதிபெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, A. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைத் தொடர்ந்து செல்வம், செந்தில், செல்வராஜ், செல்வம் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள ராமகிருஷ்ணனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.