காஞ்சிபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உத்திரமேரூர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் அதிகாலை 3 மணி அளவில் சிலர் நுழைய முயல்வதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்துள்ளனர். அவர்களை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர் அங்கு சென்றபோது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றனர். மர்ம நபர்களை பிடிக்க காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டும் அவர்கள் தப்பிச்சென்றனர்.
பின்னர், ஏடிஎம் மையத்திற்கு வந்த காவலர்கள் அங்கு சோதனை செய்தபோது, ஏடிஎம் மையத்தின் ஜன்னலை கேஸ் கட்டர் வைத்து உடைக்க முயன்றது கண்டறியப்பட்டது. மேலும் ஏடிஎம் மையத்திற்குள் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராவை ரசாயனம் பூசி மறைத்ததும் தெரியவந்தது. இதன்மூலம் அந்த மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடிவருகிறார்கள்.