தமிழ்நாடு

போலி நபர்களிடம் ஏமாந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்..! ரூ.78,000 பறிபோனது..!

Rasus

அரியலூரில் தொலைபேசியில் பேசிய நபரிடம் ஏ.டி.எம். கார்டு விவரங்களை கொடுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 78 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.

தொலைபேசியில் வங்கி ஊழியர்கள் போல பேசும் சில போலி நபர்கள், வாடிக்கையாளர்களின் பின் நம்பர், ஒன் டைம் பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்களை பெற்றுக் கொண்டு அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்றுக் கொண்டு ஆன்லைன் பணமோசடியும் நடைபெறுகிறது. எனவே வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது. வங்கி ஊழியர்கள் யாரும் உங்களின் பாஸ்வேர்டை கேட்க மாட்டார்கள். யாராவது கேட்டால் நீங்கள் துணிந்து புகார் அளிக்கலாம் என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் சிலர் போலி நபர்களிடம் ஏமாறுவது தொடர்கிறது.

அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருப்பவர் புகழேந்தி. இவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், அவரின் ஏடிஎம் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். வங்கி ஊழியர்கள் தான் கேட்கிறார்கள் என நம்பிய புகழேந்தி அனைத்து விவரங்களையும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அவரது வங்கிக் கணக்கில் இருந்து 78,000 ரூபாய் திருடப்பட்டது. பின்னர்தான் போலி நபர்கள் என்பதை உணர்ந்த புகழேந்தி இதுகுறித்து அரியலூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் கூட போலி நபர்களிடம் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காக வங்கிகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே போலி நபர்களிடம் ஏமாந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.