தமிழ்நாடு

40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா !

webteam

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழாவை காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

1979 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்ததாண்டு வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி அத்தி வரதர் திருவிழா துவங்கி 48 நாட்கள் நடைபெறவுள்ளது.உலக பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அத்தி வரதர் திருவிழாவுக்காக வரதராஜ பெருமாள் கோவிலில் இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த திருவிழாவுக்காக காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் அனைத்தும் 48 நாட்களுக்கு அரை நாட்கள் மட்டும் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் உள்ள அத்தி வரதர் இன்று குளத்தில் இருந்து எழுந்தருளவுள்ளார். அப்போது அத்தி வரதரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. ஜூலை 1 ஆம் தேதியில் இருந்தே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை அத்தி வரதரை குளத்தில் இருந்து எடுக்காததால் குளம் சுற்றிலும் யாரும் பார்க்காமல் இருக்க பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவுக்கு தமிழகம், ஆந்திரா, கேரளா என வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலும் இருந்தும் இந்த திருவிழாவில் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர்.  அதனால் தமிழ், ஆங்கிலம், உள்ளிட்ட 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இது தவிர பாதுகாப்பு பணியில் 2500 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தபடவுள்ளனர். 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அத்தி வரதர் திருவிழா ஒரு தலைமுறை மட்டுமே பார்க்க முடியும் என்றும் இரண்டாவது முறை பார்ப்பது கான கிடைக்காத ஒரு தவம் எனவும் கூறுகின்றனர்.