தமிழ்நாடு

நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர்  

webteam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் , அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளதால் இன்று தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும், அத்தி மரத்தாலான பெருமாளை நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்களின் தரிசனத்திற்காக கடந்த ஒன்றாம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் அத்திவரதர் நாளை முதல், நின்ற கோலத்தில் காட்சியளிக்க இருப்பதால், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இன்று தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

பொது தரிசனத்திற்கான நுழைவு வாயில் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்டு, கோயில் வளாகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விஐபி நபர்களுக்கான வரிசையில் வருபவர்கள் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

நாளை முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை, வழக்கம்போல் காலை 5 மணியிலிருந்து அத்திவரதரை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ள அத்திவரதரை தரிசிக்க, மேலும் அதிகமாக பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தமிழக டிஜிபி திரிபாதி தலைமையில் காஞ்சிபுரத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.