முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளங் குழந்தைகள் அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோள் நல்ல நோக்கம் கொண்டதுதான் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய சண்முகம், “முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளங் குழந்தைகள் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் கூறியது நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான். இருந்தாலும் முதியவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள் வந்தால் அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அத்திவரதரை தரிசிக்க காஞ்சிக்கு பிரதமர் வருவது குறித்த தகவல் இன்னும் எங்களுக்கு வரவில்லை.
அத்திவரதர் வைபவம் நடக்கும் வரதராஜ பெருமாள் கோயிலில் இரவு நேரத்தில் தான் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் நள்ளிரவு ஆய்வுகளை நடத்தினோம். பக்தர்கள் ஆலயத்தில் நுழையும் இடத்தில் இருந்து வெளியேறும் இடம் வரை எல்லா இடங்களையும் ஆய்வு செய்தோம். பொது மக்களை எப்படி வேகமாக தரிசனம் செய்ய செய்து அனுப்ப முடியும், அவர்களுக்கான வசதிகளை எப்படி மேம்படுத்த முடியும் என்ற அடிப்படையில் எங்கள் ஆய்வு நடந்தது. மொபைல் டாய்லட், நாற்காலிகள் அமைத்தல், ஓ.ஆர்.எஸ் கரைசல்கள் அமைப்பது குறித்த அறிவுரைகளை வழங்கி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, அத்திவரதர் தரிசனத்தை கூடுமானவரை தவிர்க்குமாறு கூற காஞ்சிபுரம் ஆட்சியருக்கு யார் அதிகாரம் வழங்கியது என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.