தமிழ்நாடு

கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய பேச்சு : மாநகராட்சி உதவி பொறியாளர் பணியிடைநீக்கம்

webteam

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி ஒருவரிடம் சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் ஆபாசமாக பேசியதாக ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவுவதைத் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. கொரோனா தொற்றை ஒழிக்க அரசுடன் இணைந்து பல தன்னார்லவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, வீடுகள் தோறும் கணக்கு எடுக்கும் பணிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்களாக மாநகராட்சி ஊழியர்களுடன் பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே தன்னார்வலராக பணியாற்றும் கல்லூரி மாணவி ஒருவரிடம், சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் என்பவர் ஆபாசமாக பேசியதாக ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், இரண்டு வருடத்திற்கு முன்பு பார்த்திருந்தால் உன்னையே திருமணம் செய்திருப்பேன் என்பதைப் போன்று, கல்லூரி மாணவியிடம் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறும்போது “ஆரம்ப ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட உதவி பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.