பேருந்து வசதியே இல்லாத தங்கள் கிராமத்தில் பேருந்து வசதியை செய்து தருவதற்கு பதிலாக, மக்களை இன்னலுக்கு உள்ளாக்கும் டாஸ்மாக் கடை வசதியை அரசு ஏற்படுத்தி தருகின்றது எனக்கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராம பெண்கள் தங்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமரமங்கலம் அடுத்த போக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிசாலப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் 70க்கும் மேற்பட்டோர் நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் அவர்கள், “எங்கள் ஊரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், எவ்வித பேருந்து வசதியும் இல்லை. அப்படியான நிலையில் பொதுமக்கள் குடியிருப்பிற்கு அருகே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இது எங்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும். பெண்கள், பள்ளி சென்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்த டாஸ்மாக் மிகப்பெரிய இடையூறாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க... 'டாஸ்மாக்கை சுற்றி வீடுகளே இல்லை'- மாவட்ட நிர்வாகத்தின் பொய்; காஞ்சிபுரம் மக்கள் அதிர்ச்சி
இந்த டாஸ்மாக் காரணமாக தங்களுக்கு பாதுகாப்பு இல்லா நிலை ஏற்படும் என்றும், எனவே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை கைவிட வேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். பேருந்து வசதியை தங்கள் கிராமத்துக்கு அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்றும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் அவர்கள்.
- எம்.துரைசாமி