தமிழ்நாடு

தகுதி இல்லாததால் பழகியதை நிறுத்தினேன்: அஷ்வினி அளித்த புகார் மனு..!

Rasus

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஏற்கனவே அழகேசன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அழகேசனுக்கு தகுதி இல்லாததால், தன்னுடன் பழக வேண்டாம் என தெரிவித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் கல்லூரி வாசலில் இளைஞரால் இன்று கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட  மாணவி அஷ்வினி, கொலை செய்த அழகேசன் மீது கடந்த 16 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மதுரவாயல் காவல்நிலையத்தில் அளித்த இந்தப் புகாரின்படி, அழகேசனுடன் கடந்த 2 ஆண்டுகாலமாக தான் நட்பாக பழகியதாகவும், பின்னர் அழகேசன் காதலிப்பதாக கூறியதால் தானும் சம்மதித்ததாக கூறியுள்ளார்.

ஆனால், அழகேசனுடன் பழகியபோதுதான் அவர் அதற்கு தகுதி இல்லாதது தெரியவந்ததாகவும், அதனால் தன்னுடன் பழக வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும்‌ அஸ்வினி புகார் மனுவில் தெரிவித்துள்ளார். தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிய நிலையில், சில நாட்கள் பேசாமல் இருந்த‌ அழகேசன் பின்னர், தன்னை பின்தொடர்ந்து வந்து தொல்லை செய்வதாகவும், தான் எவ்வளவு கூறியும் கேட்காததால் புகார் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பையும் அழைத்து விசாரித்ததையும் குறிப்பிட்டுள்ள அஷ்வினி, இனி தொந்தரவு செய்யமாட்டேன் என்று கூறினாலும் தன்னை தொடர்ந்து தொல்லை செய்வதாக அஸ்வினி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே,  அஷ்வினியை கொலை செய்ய வந்தபோது, தன் மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டபடியே அழகேசன் வந்ததாக தெரியவந்துள்ளது. அஷ்வினியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் அழகேசன் வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.