தமிழ்நாடு

திருவண்ணாமலை: கிரிவலம் முடிந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு

JustinDurai

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்ற நிலையில், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப போதிய பேருந்துகள், ரயில்கள் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய சித்ரா பெளர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. எனவே, கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணி 23 நிமிடத்திற்கு மணிக்கு தொடங்கி இரவு 12 மணி 33 நிமிடம் வரை கிரிவல நேரமாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மலையை சுற்றிய 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

வழிபாடு முடிந்து, சொந்த ஊர் திரும்ப ஏராளமான பக்தர்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால், சிறப்பு ரயில்கள் இயக்கப்படாததால் ஒரே ரயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்து ஏறிச் சென்றனர். ரயிலில் ஏற இடம் கிடைக்காதவர்கள் பல மணி நேரமாக ரயில் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. மற்றொரு புறத்தில் சொந்த வாகனங்கள், அரசுப் பேருந்துகள் கோவிலுக்கு பல கிலோ மீட்டர் தொலைவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. கிரிவலம் முடிந்து வந்தவர்கள் தற்காலிக பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடத்திற்கு செல்ல முறையாக பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்களிலும் அடாவடியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் ஏராளமானோர் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையும் படிக்க: உயிரித்தெழுந்த இயேசு கிறிஸ்து: வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை