செய்தியாளர்: V.M.சுப்பையா
ஆரூத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில், நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக, ஆர்.கே.சுரேஷ்-க்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ், சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ஆரூத்ரா மோசடி விவகாரத்திற்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார். மேலும், வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்குள்ளவதாகவும் கூறினார். வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்வதற்கு பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம், ஏழு வங்கிக் கணக்குகளுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் ரூபாயை இரண்டு வாரங்களில் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆர்.கே.சுரேஷ்க்கு சொந்தமான முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை விடுவிக்க உத்தரவிட்டது.