தூத்துக்குடி மாவட்டம் அமுதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (26) இவர் தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 17ஆம் தேதி மதுபான கடை மூடிய பின்பு சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 120 முதல் பாட்டில்கள் பறிமுதல் செய்த நிலையில், அவரை போலீசார் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து, 17ஆம் தேதி மாலை அருணாச்சலம் உடலில் தலை மற்றும் கால் ஆகியவற்றில் பலத்த காயங்களுடன் தென்பாகம் போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து, அவரது தாய் பரமேஸ்வரிமிடம் அவரது மகனை அரசு மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, அருணாச்சலத்தை காவலர்கள் நான்கு பேர் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். அந்த நான்கு காவலர்களும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி அவரது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தசூழலில் தான், அருணாச்சலம் பேசும்படியான வீடியோ தற்போது அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். அதில், மொட்டை அடித்தபடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலம், தன்னை 3 காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில், அவரது இறப்பிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ”இதுகுறித்து எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது. காவல்துறைக்குப் பொறுப்பு(?) வகிக்கும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உட்படப் பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், இன்றைய நாள் தமிழ்நாட்டில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா என்பதே சந்தேகம் தான்! நாளை பணிக்குத் திரும்பிய பின்னாவது, இந்த காவல் மரணம் குறித்து வாய் திறக்கிறார்களா என்று பார்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், ”ஏற்கனவே நாகர்கோயில் கிளைச் சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதட்டம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைது மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாச்சலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில், ”லாக்கப் மரணங்கள் மற்றும் காவல் சித்திரவதைகள் மரணம் இதுபோன்று நடக்கக்கூடாது என்பது தான் விடுதலைச் சிறுத்தைகள் நிலைப்பாடு சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்து சிறை படுத்த வேண்டும் எங்களுடைய நிலைப்பாடு காவல் சித்திரவதை மரணங்களுக்கு எதிராக எப்பொழுதும் நாங்கள் குரல் கொடுப்போம் எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
எனினும், அருணாச்சலம் மரணம் லாக்கப் மரணம் இல்லை என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டவுன் டிஎஸ்பி சுனில் கூறும் போது, ஜூலை 17-ம் தேதி விசாரணைக்காக அருணாச்சலம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்போது திடீரென அருணாச்சலம் மயங்கி விழுவே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். பின்னர் பெற்றோர்கள் மற்றும் காவலர்கள் உதவியுடன் அருணாச்சலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கும் அருணாச்சலம் மயங்கி விழுந்தார் அப்போது மருத்துவர்கள் கூறும் போது தலையில் கட்டி இருப்பதாக கூறினார்கள். அவரை அடிக்கவில்லை லாக்கப் டெத் மரணம் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து, அருணாச்சலம் மரணம் தொடர்பான 7 வினாடி காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில், மற்ற கைதிகள் இயல்பாக இருக்க அருணாச்சலம் மட்டும் மயங்கி கீழே விழுந்தார்; இது சிசிடிவியில் பதிவாகி உள்ளது என தூத்துக்குடி காவல்துறை தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த சபரிவர்மன் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த விவகாரம் ஓய்வதற்குள் மீண்டும் ஒரு மரணம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.