தமிழ்நாடு

"ஆறுமுகசாமி ஆணையம் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்" - புகழேந்தி கோரிக்கை

Veeramani

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையம், எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என வா.புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் ஓட்டலில் செய்திளர்களை சந்தித்த வா.புகழேந்தி, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளதை தொடர்ந்து, ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்ட முன்னாள் முதல்வர் கே பழனிசாமியும் விசாரிக்கப்பட வேண்டும். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பொழுது எடப்பாடி பழனிசாமி உடன் நானும் மருத்துவமனையில் இருந்துள்ளேன் நடந்தவைகள் அனைத்தும் பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும். மக்கள் பணம் 3 கோடி ரூபாய்க்கும் மேலாக இதுவரை இந்த ஆணையத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது.



அப்போலோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். மக்களின் பெயரால் பன்னீர்செல்வமும், பழனிசாமியும் இணைப்பை ஏற்படுத்தி இரட்டை இலையை மீட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது ஓபிஎஸ்ஸின் வாக்குமூலம் மூலமாக தெளிவாகிறது" என தெரிவித்தார்

மேலும், "எடப்பாடிபழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். எனவே அவர் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறேன் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மனு அளித்துள்ளேன். என்னை விசாரணைக்கு அழைத்தாலும் வரத்  தயார்" எனக் கூறினார்