ஆறுமுகசாமி ஆணையம், விசாரணை வரம்புகளை மீறியும், பாரபட்சமாகவும் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை குற்றம்சாட்டியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி, அப்போலோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை வரம்பை மீறி நடந்து கொள்வதாக கூறினார். மருத்துவத்தில் நிபுணத்துவம் பெறாத ஆணையம், மருத்துவ நிபுணத்துவம் பற்றி விசாரணை நடத்துவது தவறு என்றும் அவர் வாதிட்டார்.
அரசியல் காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம், பாரபட்சமாக செயல்படுகிறது என்றும் அப்போலோ வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க வேண்டுமே தவிர, மாற்று சிகிச்சை பற்றி விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். வாதம் நிறைவடையாததால், விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.