அரசியல் சட்டத்திற்குதான் மதிப்பில்ல, ஆர்.டி.ஐ-யுமா செல்லாம போயிரும்? என பேரறிவாளன் விடுதலை குறித்து அவரின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் இருந்து தனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் நீண்ட நாட்களாக போராடி வருகிறார். அத்துடன் மிகுந்த மன வேதனையும் அடைந்துள்ளார். இந்நிலையில் பேரறிவாளான் விடுதலை தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அற்புதம்மாள், “விடுதலை கோப்பு கையெழுத்தாகல. தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகறேன். தாமதம் ஏன்னு கேட்டு அறிவு ஒரு RTI அனுப்பினான்.
48 மணி நேரத்துல பதில் கேட்டு 48 நாளும் ஆயிருச்சு. பதில காணோம். அரசியல் சட்டத்துக்குதான் மதிப்பில்ல. RTI யுமா செல்லாம போயிரும்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் 28 ஆண்டுகள் முடிந்துவிட்டது ஆளுநர் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மறைமுக கோரிக்கையை, (#28YearsEnoughGovernor) ஹேஸ்டேக் மூலம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்களை விடுவிடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வாறு கடந்த 25 வருடங்களுக்கு மேல் கடந்தும் 7 பேர் விடுதலை என்பது முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.