சென்னையில் இடைவிடாது பெய்யும் மழையால் மூன்று சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியதால், அவை மூடப்பட்டுவிட்டன.
சென்னையில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பெருமளவில் தேங்கிக் கிடக்கின்றது. தாழ்வான இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாம்பலத்திலிருந்து தியாகராய நகருக்கு செல்லக்கூடிய துரைசாமி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வடசென்னையில் வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழை நீர் தேங்கிக் கிடப்பதால் அவ்வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இதுதவிர சேத்துபட்டு - பூந்தமல்லி சாலையை இணைக்கும் சுரங்கப்பாதையும் மழைநீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதால் அந்த வழியும் மூடப்பட்டுள்ளது. இந்த 3 சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.