செய்தியாளர்: V.M.சுப்பையா
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஹரிஹரன். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெடிகுண்டுகளை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் (அம்பேத்கர் சிலை அருகே) வைத்து மற்ற குற்றவாளிகளுக்கு மாற்றிக் கொடுத்ததாக காவல்துறையால் 17வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிஹரன் 112 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது.
அதனால், விசாரணை நிலுவையில் இருந்த போது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஹரிஹரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.