சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்ற அவலம் pt desk
தமிழ்நாடு

அரியலூர்: மயானத்திற்குச் செல்லும் சாலையில் வெள்ளம் - சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்ற அவலம்

அரியலூரில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கழுத்தளவு தண்ணீரில் மயானத்திற்கு சடலத்தை தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லபாப்பு (60). இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து இவருடைய இறுதி ஊர்வலம் நேற்று அந்த கிராமத்தில் நடைபெற்றது. மருதையாற்றின் கரையோரத்தில் உள்ள மயானத்திற்கு சடலத்தை எடுத்துச் சென்ற போது, கனமழை காரணமாக மயான பாதையில் நீர் நிரம்பி இருந்துள்ளது.

சடலத்தை கழுத்தளவு தண்ணீரில் சுமந்து சென்ற அவலம்

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் உட்புகுந்ததால் பிரேதத்தை தூக்கிக் கொண்டு இடுப்பு மற்றும் கழுத்தளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்டோர், சடலத்தை தூக்கிக் கொண்டு மிகுந்த சிரமத்திற்கு இடையே மயானத்திற்குச் சென்றனர்.

மழைக் காலங்களில் ஆற்றின் வெள்ளநீர் பாதையில் உட்புகாமல் இருக்க அதன முகப்பில் கரையை பலப்படுத்த வேண்டும் எனவும் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மணிமாறனிடம் கேட்ட போது, அந்தப் பாதையில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கின் போது நீர் உட்புகுந்தது. தற்போது மீண்டும் வந்துள்ளது என்று கூறினார்.