செய்தியாளர்: வெ.செந்தில்குமார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் பிரேம்ஜோசப் - குழந்தை தெரஸ் தம்பதியர். இந்நிலையில், குழந்தை தெரஸ் கடந்த 8ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ஜெயங்கொண்டம் - பெரியவளையம் பைபாஸ் சாலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் லால்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது பைத் (24), முகமது ஷாஜகான் (22) என்பதும் இவர்கள் இருவரும் குழந்தை தெரஸ் தாலிச் செயினை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் மீது 10 திருட்டுக் குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.