ஹவாலா பணம் பறிமுதல் pt desk
தமிழ்நாடு

அரியலூர் | ரயில் நிலைய கஞ்சா சோதனையில் சிக்கிய ரூ.77,11,640 ஹவாலா பணம் பறிமுதல்

அரியலூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற கஞ்சா சோதனையில் சிக்கிய -77 லட்சத்து 11 ஆயிரத்து 640 ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல். பணத்தை எடுத்து வந்த இளைஞரிடம் வருமானவரித் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 1.30 மணிக்கு ஹவுரா விரைவு ரயில் வந்தது. அப்போது அந்த ரயிலில் கஞ்சா எடுத்துவரலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து இளைஞர் ஒருவர் எடுத்து வந்த பேக்கை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் அவர், பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பதும் அவர் சென்னையில் இருந்து ரயில் மூலம் அரியலூர் வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், திருச்சி வருமானவரித் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த திருச்சி வருமானவரித் துறை துணை இயக்குநர் சுவோதா, வினோத்திடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பேக்கில் இருந்த 77 லட்சத்து 11 ஆயிரத்து 640 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வருமானவரித் துறையினர் வினோத்குமாரை, விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனர்.