தமிழ்நாடு

’’மயிலே மயிலே இறகு போடு என்றால் போட மாட்டேங்குறீர்கள்’’-அதிகாரிகளை சாடிய அரியலூர் ஆட்சியர்

Sinekadhara

அரியலூரில் முதல்வர் தனி பிரிவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சரமாரியாக சாடியுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்‌ நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய ஆட்சியர் ரமண சரஸ்வதி இடையில் அதிகாரிகளிடம்‌ பேசினார். அப்போது முதல்வர் தனிபிரிவுலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை சாடினார்.

அப்போது பேசிய ஆட்சியர் ரமண‌ சரஸ்வதி, அதிகாரிகள்‌ இப்போதுதான் பணியில் சேர்ந்துள்ளேன் என்று சாதாரணமாக வந்து கதை சொல்கிறீர்கள். மயிலே மயிலே இறகு போடு என்று சொன்னால் நீங்கள் போட மாட்டேங்குறீர்கள். கடந்த 10 மாதங்களாக உங்களால் எனக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டது. உங்களை எல்லாம் தாலாட்டி, பாராட்டி, சீராட்டி கேள்வி கேட்டால், தெரியாது என்ற பதிலை ஒரு டிரண்டாக வைத்துள்ளீர்கள் என்று சாடினார்.

தொடர்ந்து முதல்வர் தனி பிரிவுக்கு வரும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், ஒரு வாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளதால் அதனை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.