அரியலூர் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த தந்தை - மகன் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள காட்டுப்பகுதியில் வசித்து வந்தவர் முத்துசாமி (47), இவர் குடுபத்துடன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மளிகை கடையில் வேலை பார்த்த இவரது மகன் சங்கர் (19) வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் வந்துள்ளார்.
அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த முருங்கை மரம் முறிந்து மின் கம்பியின் மீது விழுந்ததால், மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதை கவனிக்காத சங்கர் மின் கம்பியை மிதித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதால் சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து சத்தம் கேட்டு வெளியே வந்த தந்தை முத்துசாமி அலக்கு குச்சியால் மின் கம்பியை தட்டியுள்ளார். குச்சி ஈரமாக இருந்தால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.