தமிழ்நாடு

ரூ.13 லட்சம் செலவழித்து அரசுப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றிய முன்னாள் மாணவர்!

webteam

சொந்த ஊரில் தான் படித்த அரசுப் பள்ளியை 13 லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி அமைத்துள்ளார் முன்னாள் மாணவர் ஒருவர். அவரைப் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சிறுவயதில் தான் படித்த பள்ளியை லட்சக்கணக்கில் செலவு செய்து மேம்படுத்தும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அப்படி ஒரு அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார், அரியலூர் மாவட்டம் பெரியதிருக்கோணம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். சென்னையில், தொழிலதிபராக ஏற்றுமதி - இறக்குமதித் தொழில் ஈடுபட்டிருக்கும் அவர், சொந்த ஊரில் தான் படித்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அதன் கட்டமைப்பை மேம்படுத்த விரும்பினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்து பள்ளிக்கும் மாணவர்களுக்கும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதைக் கேட்டு தெரிந்துகொண்டார். அதன்படி கிட்டத்தட்ட 13 லட்ச ரூபாய் செலவில், ஸ்மார்ட் கிளாஸ், நூலகம், உணவுக்கூடம், சாப்பிடும் கூடம் கட்டிக்கொடுத்து, விளையாட்டு உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன், அனைத்து அறைகளிலும் தரையில் டைல்ஸ் பதித்து, கட்டடங்களுக்கு வண்ணம் அடித்து, மொத்தப் பள்ளியையும் அழகுபடுத்திக் கொடுத்துள்ளார்.

“நான் படித்த பள்ளியை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்திக் கொடுத்துள்ளேன். இதன்மூலம், இங்கு படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கிறேன். இதுபோல், மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளியை மேம்படுத்த முன்வர வேண்டும்” என்கிறார் செல்வராஜ்.

முன்னாள் மாணவர் செல்வராஜ் செய்துகொடுத்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன். மேலும் இது போல் தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை முன்னாள் மாணவர்கள் மேம்படுத்த வேண்டும் என பாலசுப்பிரமணியன் கூறினார்.