சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது திமுக - அதிமுகவினருக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கேள்வி நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளிக்கும் போது, அதிமுக பொது செயலாளர் சசிகலாவை பற்றி பேசினார். அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் பேசிய சபாநாயகர் கட்சியின் தலைமையை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை என்றார். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகளுக்கு கட்சியின் தலைமையை பற்றி பேச உரிமை உள்ளது என்றாலும், மரபுக்கு மீறிய செயலை திமுக சட்டபேரவையில் செய்யாது என்றார். அப்போது பேசிய முதல்வர் பன்னீர்செல்வம் கடந்த காலங்களில் திமுகவினர் பலமுறை இதே அவையில் தங்களுடைய கட்சியின் தலைவரை பற்றி பேசியுள்ளதை நினைத்து பார்க்க வேண்டும் என்றார். அப்போது பேசிய ஸ்டாலின், நாங்கள் செய்தது தவறு தான், ஆனால் அதே தவறை தற்போதைய அரசும் தொடர வேண்டுமா என்றார்.