மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தஞ்சையில் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் நடந்தது. இதில் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுக்கொண்டே வந்தார்கள். அதன் ஒருபகுதியாக, தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவராக ஜெய் சதீஸ் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது ஜெய் சதீஸ்க்கு எதிர்த்தரப்பினர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது.
பின் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், “உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தது போல மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக கொண்டு வரப்படும். திமுக ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது அவர்களது பகல் கனவு. வரிக்கு மேல் வரி போடுகிறார்கள். சொத்து வரி உயர்வு மக்கள் மீது சுமையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
டாஸ்மாக் கடை கஞ்சா விற்பனை போன்ற மக்கள் விரோத நடவடிக்கையால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். தமிழக ஆளுநரை எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலையில் திமுக அரசு உள்ளது. ஆளுநர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது தமிழக அரசு தொடர்ந்து வன்மத்தை கட்சி வருகிறது” எனத் தெரிவித்தார்.