தமிழ்நாடு

நாளை போலியோ சொட்டு மருந்து போட நீங்கள் ரெடியா?

நாளை போலியோ சொட்டு மருந்து போட நீங்கள் ரெடியா?

webteam

தமிழ்நாடு முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவைதவிர பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட ஆயிரத்து 652 இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயிரம் நடமாடும் குழுக்கள் மூலமாக கிராமப்புறக் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. இந்தாண்டு சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர் தவறாமல் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.