மரியவில்சன் Pt web
தமிழ்நாடு

என்னைக் கிண்டல் செய்கிறீர்களா.? இது தான் என் ஸ்டைல் - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கோபம்

நீங்கள் கத்தினால் எனக்கும் கத்த தெரியும் நானும் கத்துவேன். 25 முதல் 30 வருடமாக கல்வித்துறையில் இருந்துள்ளேன். அங்கே என்னுடைய பேச்சு ஆங்கிலத்தில் தான் இருந்துள்ளது.

Premkumar S

தமிழ்நாடு பட்ஜெட் 2026, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், 2 நாள் விடுமுறைக்கு பிறகு, சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ் உச்சரிப்புத் தொடர்பாக நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் இடையே காரசார விவாதம் நடைபெற்றிருக்கிறது.

எம்.எல்.ஏ. ராஜேந்திரன்

சட்டப்பேரவையில், எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசும்போது, ”நிதியமைச்சரின் ஆங்கில உச்சரிப்பு நேர்த்தியாக இருக்கும் அளவுக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை எனவும், பட்ஜெட் வாசிப்பின் போது இலக்கண பிழைகளுடன் அவர் பேசியதாகவும், வருங்காலத்தில் நிதியமைச்சருக்கு பிழையின்றி பட்ஜெட் வாசிக்கும் வாய்ப்பு இருக்குமானால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவருக்கு உதவ வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு கோபமடைந்த பேசிய மரியவில்சன், நீங்கள் கத்தினால் எனக்கும் கத்த தெரியும் நானும் கத்துவேன். 25 முதல் 30 வருடமாக கல்வித்துறையில் இருந்துள்ளேன்.அங்கே  என்னுடைய பேச்சு ஆங்கிலத்தில் தான் இருந்துள்ளது. கொஞ்சம் நாளாகவே பார்க்கிதேன் உருவ கேலி பண்ணுவது, பெண்கள் குறித்து கேலி பண்ணுவது போன்றவற்றை தொடர்ந்து இப்போது மொழி குறித்து வந்து விட்டார்கள். எனக்கு ஒரு மொழியை கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்துள்ளது. அது அன்பு மொழி, அமைதி மொழி, இரக்கத்தின் மொழி இது பாதி பேருக்கு எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது.

மரிய வில்சன்

என்னுடைய ஸ்டைல் இதுதான்; இப்படித்தான் பேச முடியும். ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக நான் மாற்றிக்கொள்ள முடியாது. நான் இப்படித்தான் பேசுவேன் என்ன கேலி பண்ணுகிறீர்களா?” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பேசிய சபாநயகர் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள் எனப் பேசி சமாதானப்படுத்தினார். இதனால், சிறிது நேரம் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.