தமிழ்நாடு

தேர்தல் விடுமுறையை கொண்டாட்ட நாளாக மாற்றுகின்றனரா நகர்புற மக்கள்?

sharpana

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவில் நகர்புறங்களை விட கிராம பகுதியிலேயே அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜனநாயக கடமையாற்ற நகர்புற மக்கள் இந்த முறையும் ஆர்வம் கட்டாதது ஏன் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

பரபரப்புடன் விறுவிறுப்பாக நடந்திருக்கிறது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு. இத்தேர்தலில் மாநிலம் முழுவதும் 72.78 சதவிகிதம் என்ற சராசரி அளவில் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. கடந்த தேர்தலை விட சுமார் 2 சதவிகிதம் வாக்குகள் குறைவு என்றாலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

ஆனால், இந்த முறையும் நகர்புறங்களை விட கிராமப்புற மக்களே அதிக அளவு வாக்களித்துள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையில் 16 தொகுதிகளிலும் சேர்த்து 59.06 சதவிகித வாக்குகள்தான் பதிவாகியிருக்கிறது. இது கடந்த தேர்தலை விட 1.6 சதவிகிதம் குறைவு.

கோவை, மதுரை, திருப்பூர், நெல்லை போன்ற நகர் பகுதியிலும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளது. இதற்கு ஒவ்வொரு பகுதிகளிலும் இருக்கும் அப்போதைய சூழ்நிலை, பாதிப்புகளும் ஒரு காரணியாக இருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் படித்த மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலேயே குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர். வெளிநாட்டில் வசிப்பவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு தபால் வாக்குகள் அறிமுகம் செய்யலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அதோடு வாக்குப்பதிவு நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாட்களாக நகர்புற மக்கள் கருத்துவதால் அந்த மனநிலையை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியமாகிறது.