உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா பீச். சென்னையின் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று. காலையும் மாலையும் கூட்டம் அலைமோதும். வார விடுமுறை நாட்களில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் மெரினா பீச்சில் வாகனங்களை நிறுத்த எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும்.
சென்னை மாநகராட்சி எடுத்துள்ள முடிவுப்படி இனி பார்க்கிங் செய்வதற்கு பணம் வசூலிக்கப்பட இருக்கிறது. கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு ரூபாய் 20 எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு மணிக்கு ரூபாய் 5 எனவும் வசூலிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதோடு, எல்லியட்ஸ் பீச்சிலும் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ள இடத்தில் சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் இடம்பெறுவர். மேலும் கடற்கரை செல்வதற்கு முன்பே, மொபைல் அப்ளிகேஷன் மூலம் பார்க்கிங் இடத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பார்க்கிங் ஏரியா எது என அறிந்து கொள்ளும் வகையில் வழிகாட்டுதல்கள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.