தமிழ்நாடு

தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் நீட் முறைகேடுகள் ஏதும் நிகழவில்லையா?-மதுரைக்கிளை கேள்வி!

sharpana
அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வுகளில் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பெறுவது தொடர்பாக அகில இந்திய மருத்துவ கல்வி தகுதித்தேர்வு வாரியம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலம் உன்னியாலைச் சேர்ந்த ரஷீத் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " நீட் தேர்வில் முறைகேடு செய்து, மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றதாக பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது தேனி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அளித்த புகாரின் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஏறத்தாழ முடிவடையும் நிலையில் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 16 பேர் கைது செய்யப்பட்டு பலர் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன்.
சாட்சிகளின்றி, மேலோட்டமான புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு அதனை காரணம் காட்டி, ஜாமின் மறுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். ஆகவே ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், " வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதையைப் போலதான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மட்டுமே நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகின்றனர். பிற மாநிலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதும் நிகழவில்லையா? என கேள்வி எழுப்பினார். 
தொடர்ந்து, நீட் தேர்வை எழுதும் போதும், கலந்தாய்வில் கலந்துகொள்ளும் போதும் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வது மூலமாக முறைகேடுகளை தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் இந்த பயோமெட்ரிக் முறையை நடைமுறைப்படுத்தினால், பிற மாநிலங்களில் முறைகேடுகள் நிகழவும், அதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படும் சூழலும் உருவாகும். ஆகவே அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வுகளில் மாணவர்களின் கைரேகையை பயோமெட்ரிக் முறையில் பெறுவது தொடர்பாக அகில இந்திய மருத்துவ கல்வி தகுதி தேர்வு வாரியம் பதிலளிக்க உத்திரவிட்டார்.
மேலும் 2018ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கு விபரங்களை சிபிஐ அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.