தவெக தலைவர் விஜய் pt
தமிழ்நாடு

மதுரை மாநாடு | தவெக தொண்டர்களின் அடுக்கடுக்கான ஆபத்தான செயல்பாடுகள்!

தவெக மாநாட்டில் ஆபத்தான முறையில் தொண்டர்கள் செய்த செயல்களைப் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

PT WEB

மதுரையில் நடைபெற்று முடிந்துள்ள தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் தொண்டர்கள் செய்த ஆபத்தான செயல்கள் பலரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது..

- சீ.பிரேம்

அரசியல் அறிவு என்பது களப்பணிகளில் இருந்து கிடைப்பது, அது களத்துக்கு வரும்போது நிச்சயம் கிடைக்கும். ஆனால் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் ஆர்வமிகுதியால் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வகையில் தவெக நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தொண்டர்கள் செய்த ஆபத்தான செயல்கள் பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

தவெக தலைவர் விஜய்

சமீபத்தில் தமிழநாட்டில் காவல்துறை படுகொலைகளை கண்டித்து தவெக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள் அங்கிருந்த மரத்திலேறினர். இதனால், தவெக பொதுச்செயலாளார் என். ஆனந்த் மரத்திலேறிய தொண்டர்களை “மரத்திலிருந்து இறங்கு.... இறங்கு” என்று கூறியது சமூக வலைதளங்கள் உட்பட அதிகம் பகிரப்பட்டு தவெக தொண்டர்களின் பக்குவம் பற்றி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதுபோலவே பல தவெக தொண்டர்கள் இந்த மாநாட்டிலும் பல ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தவெக மாநாட்டிற்கான பேனர் வைக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்துபோனார். இந்த விபத்து கூட அந்த நபர் தானாக சென்று ஏற்படுத்திக் கொண்டது அல்ல. ஆனால் அந்த மாதிரி அல்லாமல் மாநாட்டில் தெரிந்தே தவெக தொண்டர்கள் ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

தவெக மாநாட்டின் தொடக்கத்திலேயே தொண்டர்கள் ரேம்ப் வாக் தடுப்புகளில் ஏறி குதிப்பதற்கு வாய்ப்புண்டு எனக் கருதி ரேம்ப் வாக் தடுப்புகளுக்கு கிரீஸ் தடவப்பட்டது. மரத்தில் ஏறக்கூடும் எனக்கருதி மாநாட்டுப்பகுதியில் இருந்த பனைமரத்தின் சுற்றிலும் தகரம் கட்டப்பட்டது. ஆனாலும் இந்த இரண்டு செயல்களும் மாநாட்டில் நடந்தேறின.

விஜய் ரேம்ப் வாக் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே அவர் நடந்த சென்று பகுதியில் தொண்டர்கள் ஆபத்தான முறையில் ஏறிச் சென்றனர். தடுப்புகளை சாய்த்துவிட்டே அவர்கள் அங்கு சென்றனர். சென்றவர்கள் அத்தோடு நில்லாமல் விஜய்யை ஒரு மாதிரி முற்றுகையிட்டனர். ஒருவரோ விஜயின் கால்களை பிடித்துக் கொண்டார்.

ஒரு படி மேலே சென்ற தவெக தொண்டர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் பல முறை வற்புறுத்தியும், அங்கு மின்விளக்குகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பல அடி கம்பங்களில் ஏறி அமர்ந்தனர். மாநாடு முடியும் வரை அந்த கம்பங்களின் மீதே அமர்ந்திருந்தனர். இது மின்விளக்குகளுக்காக அமைக்கப்பட்ட கம்பம் ஆதலால் பலருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

மின்கம்பங்களில் ஏறிய தவெக தொணடர்கள்

இது ஒருபுறமிருக்க வெளியூரிலிருந்து மாநாட்டிற்காக வேன்களிலும், பஸ்களிலும் வந்த தொண்டர்கள் பேருந்துகளின் மீதேறி பயணித்தனர். சிலர் அடுத்த எல்லைக்குச் சென்று பஸ்களின் மீதே நடனமாடினர். ஆபத்தை அறியாத இந்த செயல் கஷ்டத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

பனை மரத்தின் உச்சியில் ஏறி ஒருவர் தவெக கொடியுடன் இருந்த புகைப்படமும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தொண்டர்களின் இந்த மாதிரியான செயல்கள் குடும்பம், பொதுமக்கள், அவர்கள் விரும்பும் கட்சி என அனைத்திற்கும் சேதம் விளைவிப்பத்தாகவே இருக்கும். சிறந்த அரசியலை முன்னெடுப்பதற்கு சிறந்த நடைமுறை அவசியம் என்பதை தொண்டர்கள் உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.