தமிழ்நாடு

ஆற்காடு வீராசாமி குறித்து சர்ச்சை பேச்சு- கலாநிதியின் கண்டனமும், அண்ணாமலையின் வருத்தமும்

ஜா. ஜாக்சன் சிங்

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறியதற்காக தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னதாக, அவரது பேச்சை கண்டித்து ஆற்காடு வீராசாமியின் மகனும், எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து கே. அண்ணாமலை பேசினார். அப்போது அவர், திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இறந்துவிட்டதாக தவறான தகவலை கூறினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, இந்த விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து ஆற்காடு வீராசாமியின் மகனும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி காட்டமான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் அவர், "ஆற்காடு வீராசாமியின் பெயராவது அண்ணாமலைக்கு தெரிந்துள்ளதே என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

தனது கொள்ளுப் பேரனின் பிறந்தநாள் விழாவில் நேற்று அவர் கலந்துகொண்டார். அவர் நலமாக உள்ளார். எனது தந்தை பற்றி அண்ணாமலை தவறான கருத்தை கூறியதை வன்மையாக கண்டிக்கிறேன் " எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த அறிக்கைக்கு பதிலளித்து கே. அண்ணாமலை ட்விட்டர் பதிவை வெளியிட்டார். அதில், "நாமக்கல் பொதுக்கூட்டத்தில் உங்கள் தந்தையார் ஆற்காடு வீராசாமி குறித்து தவறான தகவலை அளித்ததற்ககாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆற்காடு வீராசாமி நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்" என அண்ணாமலை கூறியுள்ளார்.