சேலம் தெலங்கனூர் pt web
தமிழ்நாடு

சேலத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி: குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடமா?

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எட்டு தொல்லியல் அகழ்வாராய்ச்சி இடங்களில் சேலம் மாவட்டம் தெலங்கனூரும் ஒன்று. ஏன் இந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை பார்ப்போம்.

PT WEB

செய்தியாளர் பாலகிருஷ்ணன்

தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தெலுங்கனூர் காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சேலம் மாநகரின் மையப்பகுதியில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். தெலுங்கனூரை சுற்றி உள்ள மாங்காடு, கோரப்பள்ளம் மற்றும் பண்ணவாடி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தை இப்பகுதி மக்கள் பாண்டியன் திட்டு என்றழைக்கிறார்கள்.

தெலுங்கனூரில் இரண்டு மெருகூட்டப்பட்ட கல் கருவிகள், இரும்புப் பொருட்கள் மட்டுமின்றி 4.7 சென்டிமீட்டர் அகலம், 88 சென்டிமீட்டர் நீளத்துடன் கூடிய வாள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. எஃகால் செய்யப்பட்ட இந்த வாள் கண்டெடுக்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தெலுங்கனூரில் கிடைத்த வாளின் வயது சுமார் 3,460 ஆண்டுகளாக கருதப்படுகிறது. அதேபோன்று மாங்காட்டில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருளின் தற்போதைய வயது 3,629 ஆண்டுகள் என அறியப்பட்டுள்ளது.

தெலுங்கனூருக்கு அருகில் உள்ள மூலக்காடு மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் உள்ள கல்வட்டத்தில் மேற்கு நோக்கி கல்லறைகள் தெலுங்கனூரில் காணப்பட்ட குழி அடக்க கல்லறைகளை விட முந்தையவை என்று கூறப்படுகின்றன. மேலும் இங்குள்ள கல்திட்டைகளை இப்பகுதி மக்கள் குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம் என்று குறிப்பிடுகிறார்கள். தெலுங்கனூரில் அகழாய்வு செய்ய திட்டமிட்டிருப்பதால் இதன் தொன்மை விரைவில் வெளிப்படும் என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.