அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை, 17 சுற்றுகளுக்குப் பதில் 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் தளவாபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை திமுக வேட்பாளர், செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர், ‘’அரவக்குறிச்சி சட்டப்பேரவை தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு 2 அறைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோருக்கு இந்த அறைகள் போதுமானது அல்ல. அரங்கம் போன்ற பெரிய இடத்திற்கு வாக்கு எண்ணிக்கையை மாற்ற வேண்டும்’’ என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், அவர் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்துள்ளது. இட நெருக்கடி ஏற்படும் என்பதால் 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகளில் மட்டுமே எண்ணவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.