செய்தியாளர் - கார்த்திகேயன்
அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான கலைஞர் திடல் நிலத்தில், கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி அன்று, திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்பட்டது என்றும், மாநாடு நடந்த 124 ஏக்கர் நிலத்தை சமன் செய்வதற்காக, அருகில் உள்ள ஏரியில் இருந்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி ஆழத்திற்கு தோண்டி, சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகவும் கூறப்பட்டுள்ளது.
கனிமச் சலுகைகள் விதிகளின்படி இது சட்டவிரோதம் என்றும், இதனால் கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு, அரசுக்கு 8 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதோடு, விவசாயிகளும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மாநாட்டிற்கு வருவதற்கு வசதியாக, ஏரியின் கரை மீது அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எ.வ.வேலு, அவரது மகன் குமரன், முறைகேடு நடக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் புகாரோடு சேர்த்து, கலைஞர் திடல் நிலம் குறைவான விலைக்கு எப்படி வாங்கப்பட்டது என்றும், அறப்போர் இயக்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது, மலப்பம்பாடி கிராமத்தில் ஒரு சென்ட் நிலமே 2 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், ரிஷி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து, இந்த 124 ஏக்கர் நிலத்தை, வெறும் 46 கோடிக்கு எ.வ.வேலுவின் மகன் வாங்கியிருப்பதாகவும், இவ்வளவு குறைவான விலைக்கு நிலத்தை எப்படி வாங்கினார்கள் என்றும், கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த ரிஷி என்டர்பிரைசஸ் என்ற நிறுனம், நெடுஞ்சாலைத்துறையில் பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தொடர்ச்சியாக பெற்று வரும் பாண்டித்துரைக்கு சொந்தமானது என்றும், அவரது மனைவியின் பெயரில் தான் நிறுவனம் நடத்தப்படுகிறது என்றும், அறப்போர் இயக்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.