தமிழ்நாடு

கிடா விருந்துடன் கோலாகலமாக நடைபெற்ற அறந்தாங்கி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா!

kaleelrahman

அறந்தாங்கி அருகே கருவிடைச்சேரி பகுதியில் `அய்யனார் கோயில் புரவி எடுப்பு’ திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருவிடைச்சேரி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா 3 நாட்கள் நடைபெறும். இதில், முதல்நாள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் 3 ஆம் நாள் குதிரை எடுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒரு மாதத்திற்கு முன்பே குதிரைக்கு மண் கொடுத்து விட்டு வந்துவிடுவர்.

இவ்வருடமும் இவ்வழிமுறை பின்பற்றப்பட்டு, கடந்த வருடமே குதிரைக்கு மண் கொடுத்துள்ளனர். இதையடுத்து அறந்தாங்கி வேலாளர் தெருவில் குதிரைகள் செய்து தயாராக இருந்த நிலையில், நேற்றைய தினம் கோயிலில் இருந்து மேலதாளங்களுடன் சாமியாடி மற்றும் கிராம மக்கள் இணைந்து அறந்தாங்கி சென்று மண் குதிரைகளை தங்கள் ஊர் கோயிலுக்கு தூக்கிக்கொண்டு சென்றனர்.

நிகழ்வின்போது விரதம் இருந்து கால்நடைகள், பொம்மைகளை கோயிலுக்கு நேர்த்திக்கடனாக அவர்கள் கொண்டு சென்றனர். மேலும் புரவி எடுத்துச் செல்வதை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இரண்டு புறமும் நின்று பார்த்து ரசித்தனர்.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் குதிரைகள் 3 நாட்களுக்கு கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்டு, பிறகு கோயிலின் உள்பிரகாரத்தில் வைக்கப்படும். இந்த திருவிழாவை முன்னிட்டு கருவிடைச்சேரி கிராமத்தில் பலரும் வீடுகளில் உறவினர்களுக்கு கிடா விருந்து கொடுத்தனர்.