தமிழ்நாடு

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - அபாய எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்

webteam

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாவட்ட ஆட்சியர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நிவர் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 1.84 டிஎம்சியும், மொத்த அடியான 31 அடியில் 29 அடியை தண்ணீர் எட்டியதையடுத்து, ஆரணி ஆற்றில் உபரி நீராக தண்ணீரை திறக்க ஆந்திர பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, லட்சுமிபுரம், பெரும்பேடு உள்ளிட்ட ஆரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆரணி ஆற்றின் குறுக்கே செல்லும் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆந்திராவிற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை செல்லும் பொதுமக்களும், ஊத்துக்கோட்டை இருந்து திருவள்ளூர் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்