அரக்கோணம் அருகே பணப்பாக்கத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக இரண்டு ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24ம் தேதியன்று அரக்கோணம் அருகே பணப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த தீபா, மனிஷா, சங்கரி, ரேவதி ஆகிய 11-ம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியைகள் திட்டியதுதான் அவர்களின் தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரமா, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஷ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அதிகாரி அமுதா ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லில்லி, சிவகுமாரி ஆகிய ஆசிரியைகள் தற்காலிகப் பணியாற்றி வந்தனர். அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.