தமிழ்நாடு

அரக்கோணம்: முதியோர் கல்வி திட்டத்துக்கான தேர்வில் ஆர்வமுடன் தேர்வெழுதிய 2,747 முதியவர்கள்

நிவேதா ஜெகராஜா

அரக்கோணம் மாவட்டத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற திட்டத்தின் கீழ் 112 மையங்களில் 2,747 முதியவர்கள் ஆர்வமுடன் தங்களின் தேர்வை  இன்று எழுதினர். தேர்வு அனுபவம் குறித்து அவர்கள் நம்மிடையே பேசுகையில், “கல்வி கற்க வயது இல்லை என்பதற்கு நாங்கள் ஒரு முன்னுதாரணம், நாங்களும் ஆல் பாஸ் ஆவோம் பாருங்க” என்றனர் உற்சாகமுடன்.

தமிழகத்தில் பள்ளி காலத்தில் இடைநிற்றலுக்கு உள்ளான பெரியவர்கள் மற்றும் தற்போது வயது முதிர்ந்தவர்களாக (60+ வயது) இருப்பவர்கள், வயது பேதமின்றி கல்வி கற்கும் வகையில் "கற்போம் எழுதுவோம்" என்ற திட்டமொன்று வழக்கத்தில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமங்கள்தோறும் முதியோர் மற்றும் இடைநின்ற - தற்போது வயதில் பெரியவர்களாக இருப்போருக்கான பாட வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதில் சேர்வதற்காக கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்கள், வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த பெண்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கும் வழக்கமும் தமிழ்நாட்டில் உள்ளது. வயது பேதமின்றி அனைவரும் அடிப்படை எழுத்தறிவையும் கல்வியறிவையும் பெற வேண்டுமென தமிழ்நாடு அரசும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இதில் கல்வி பயிலும் முதியவர்கள் ஒவ்வொருக்கும், பள்ளி வளாகத்தில் நாளொன்றுக்கு ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட வகுப்புகளில் இருந்து, ஆண்டு இறுதியில் தேர்வொன்றும் நடத்தப்படும். அப்படி கடந்த மே மாதம், இறுதிதேர்வொன்று அவர்களுக்கு நடைபெற இருந்தது. ஆனால் மே மாதத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்பட்டதால் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா சற்று குறைந்துள்ளதால், தேர்வு நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் மட்டும், கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் 112 மையங்களில் 2,747 முதியவர்கள் கல்வி பயின்று வந்தனர். இவர்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. அதில் முதியவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதியவர்களின் இந்த ஆர்வம், அங்கிருந்த பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. இத்தேர்வுகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தேர்வுக்கு தேர்வு மையங்களில், எழுத்து முறை வினாத்தாள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மையத்திலும் அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். தேர்வெழுதிய முதியோர்கள் தங்களின் கல்வி கற்றா அனுபவம் குறித்து நம்மிடையே தெரிவிக்கையில், இதற்கு முன்பு தாங்கள் வங்கிகளில் நேரடியாகச் சென்று கையெழுத்திட்டு பணம் பெற முடியாத நிலை இருந்ததாகவும் தற்போது இந்த கல்வி முறையால் வங்கி கணக்கில் பணப்பரிவர்த்தனை தாள் முழுவதையும் தாங்களே சுயமாக பூர்த்தி செய்து பணம் எடுப்பதாகவும் மகிழ்ச்சியாக தெரிவித்தனர். மேலும் வெளியூர் பயணங்களின்போது, பயணம் எளிதாக அமைய இந்த கல்வியறிவு தங்களுக்கு உதவுவதாகவும் அவர்கள் கூறினர்.

இத்திட்டத்தில் இவர்களுக்கு தன்னார்வலர்கள் கொண்டே பாடம் நடத்தப்படுகிறது என்பதால், இவர்களுக்கென நிரந்தர ஆசிரியர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் வைக்கின்றனர்.

நாராயணசாமி