தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஐடிஐ-க்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அதற்காக நாளை முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று வேலை வாய்ப்பு பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இணைதளத்தில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளைக் கவனமாகப் படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விருப்பம் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.