மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவரது மரணம் குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அதிமுக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை என்றும், ஆனால் உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதால், சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் கிடையாது, ஆனால் மருத்துவமனை வளாகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் அனைத்தும் உள்ளதென்று அப்போலோ தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்கு கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் இருப்பதாகவும், அதிமுக அமைச்சர்களின் பலதரப்பட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும் என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனது. அப்போலோ தரப்பில் எந்த ஒளிவு, மறைவும் இல்லை என்றும், மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ நிறுவனர் பிரதாப் ரெட்டி, “ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது, எங்களால் முடிந்த 100% சிகிச்சையை வழங்கினோம். ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகள் குறித்து தற்போது கூற இயலாது. அதனை பின்னர் முறையாக வெளியிடுவோம்.” என்று கூறினார்.