தமிழ்நாடு

"விசாரணை ஆணையத்துக்கு எங்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவோம்”- அப்போலோ நிர்வாகம் அறிக்கை

நிவேதா ஜெகராஜா
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையத்திற்கு ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பை போல் முழு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை விசாரணை குழுவில் அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஏற்கெனவே விசாரணைக்காக ஆஜரான சாட்சிகளிடம் மீண்டும் குறுக்கு விசாரணை அல்லது மறு விசாரணையை அப்போலோ தரப்பு கூறினால் அதை மனுவாக தாக்கல் செய்து விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடுநிலையோடும், துல்லியமாகவும், முறைப்படியும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே முன்பை போல தொடர்ந்து எங்களது முழு ஒத்துழைப்பை கொடுப்போம்.
விசாரணை ஆணையத்திடம் இதுவரை அப்போலோ மருத்துவர்கள் 56 பேர், 22 துணை மருத்துவர்கள் ஆஜராகியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான 6,000 பக்க மருத்துவ அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.