தமிழ்நாடு

``நாங்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா கேட்கவில்லை”-அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

நிவேதா ஜெகராஜா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். எய்ம்ஸ் பரிந்துரைத்த மருத்துவர் குழு, ஆணையத்தின் விசாரணைக்கு காணொளி வாயிலாக பங்கேற்றிருந்தது.

அப்போது நடந்த விசாரனையில், அப்போலோ மருத்துவர் பாபு மனோகர், ஆறுமுகசாமி ஆணையத்திடம், “மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார். 2016ல் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்னதாகவே அவருக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது. முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு பிறர் உதவியில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது. இதன் காரணமாக, மருத்துவர் சிவக்குமார் என்னை அழைத்ததன்பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் சந்தித்தேன். தினந்தோறும் 16 மணி நேரம் வேலை இருப்பதாகக் கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டார்” எனக்கூறி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மேலும் மருத்துவர் பாபு மனோகர் பேசுகையில், “சிறுதாவூர் அல்லது உதகை சென்று ஓய்வெடுக்குமாறு ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்தேன். சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு சில உடற்பயிற்சிகளை செய்யுமாறும் பரிந்துரைத்தேன். ஆனால் பணி காரணமாக அவரால் அதை செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.