தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார் ஏ.பி.சாஹி

webteam

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.பி.சாஹி நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க இருப்பதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில்ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்ததை ஏற்காமல் செப்டம்பர் 6ஆம் தேதி ராஜினாமா செய்தார். தற்போது மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

அதையடுத்து பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் 1862ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீபதியாகவும் ஏ.பி சாஹி நாளை பதவி ஏற்று கொள்கிறார் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் உறுதிபடுத்தியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

பின்னர் 11:30 மணியளவில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகளை விசாரிக்க தொடங்குவார் சாஹி.