தமிழ்நாடு

“குடியுரிமை சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் மகன், மகள் தோல்வி” - அன்வர் ராஜா

webteam

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட தனது மகள் மற்றும் மகன் தோல்வியை சந்தித்தனர் என அக்கட்சியின் முன்னாள் எம்பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள், நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை எண்ணப்பட்டு வருகின்றன. 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், மேலும் சில மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே ராமநாதபுரத்தில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்.பி அன்வர் ராஜாவின் மகன் மற்றும் மகள், திமுகவிடம் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் மகன், மகள் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து அன்வர் ராஜா புதியதலைமுறைக்கு பேட்டியளித்தார். அதில், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக சிறுபான்மையினர் வாக்களித்துள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என சிறுபான்மையினர் அச்சப்படுகின்றனர்.

அசாமில் மட்டுமே அமல் என பாஜக கூறியதால் அதிமுக நாடாளுமன்றத்தில் ஆதரவு தந்தது. சிறுபான்மையினர் அச்சப்படுவதால் அதிமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் எனவும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என சொல்லும் எனவும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.