அன்வர் ராஜா முகநூல்
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்!

தன்னுடைய கொள்கையிலிருந்து தடம்புரண்டு தற்போது பிஜேபியின் கையில் சிக்கியிருக்கிறது அதிமுக என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது திமுகவில் இணைந்திருப்பவருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

பாஜகவோடு மீண்டும் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், அதிமுக தலைமைமீது அதிப்தியடைந்திருக்கிறார் அன்வர் ராஜா. இந்தநிலையில், இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அன்வர் ராஜா

அன்வர்ராஜா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். இதற்கிடையில் அன்வர் ராஜா அறிவாலத்திற்கு சென்று, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.

இந்நிலையில், தன்னுடைய கொள்கையிலிருந்து தடம்புரண்டு தற்போது பிஜேபியின் கையில் சிக்கியிருக்கிறது அதிமுக என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது திமுகவில் இணைந்திருப்பவருமான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ” நாங்கள் அனைவரும் கருத்தியல் ரீதியாக பேரறிஞர் அண்ணா தலைமையிலும் அதன் பின்பு வந்த தலைவர்களின் தலைமையிலும் வாழ்ந்தவர்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருந்து நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால், அதற்கு புறம்பாக அண்ணா திமுக இப்போது இருக்கிறது. தன்னுடைய கொள்கையிலிருந்து தடம்புரண்டு தற்போது பிஜேபியின் கையில் சிக்கியிருக்கிறது.

அமித்ஷா தெளிவாக சொல்லிவிட்டார் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், அதில் பாஜகவும் இடம்பெறும் என்றும் . அதிமுகவை அழித்துவிட்டு திமுகவை எதிர்க்கவேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். ஒரு இடத்தில்கூட பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என அமித்ஷா கூறவில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனாவை பாஜக அழித்துவிட்டது. பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர்.

அதிமுகவை காப்பாற்ற மனதில் உள்ள ஆதங்கத்தையெல்லாம் சொன்னேன். மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் அதிமுகவில் இல்லை. பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை கூர்மைப்படுத்தியவர் ஸ்டாலின்தான். திமுக மீண்டும் வெல்லவேண்டும் என்பதே மக்களின் எண்ணம். பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்ததற்கும் பழனிசாமி கூட்டணி வைத்ததற்கும் வித்தியாசம் உள்ளது. “ என்று தெரிவித்துள்ளார்.