அதிமுகவில் சிறுபான்மையினரின் முகமாக இருக்க கூடிய அன்வர் ராஜா, சிறுபான்மை வாக்கு அதிகமாக கிடைக்க கூடிய திமுகவோடு, முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் இணைந்திருக்கிறார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், அன்வர் ராஜவின் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர், 2014 ராமநாதபுரம் மாவட்ட எம்பியாக இருந்தவர். 1986 ஆம் ஆண்டு ஆட்சிமன்ற குழுவை எம்ஜிஆர் உறுவாக்கியபோதே அதில் 16 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது. அதில், அன்வர் ராஜாவும் ஒருவரே.
கட்சியின் அமைப்பு செயலாளராகவும், 2001 ஆம் ஆண்டு அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தாவின் மறைவிற்கு பிறகு சசிகலாவின் ஆதரவாளராக மாறிய இவர், மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறினார்.
அதிமுகவின் ஆரம்பகாலத்திலிருந்து பல்வேறு விஷயங்களில் முக்கியமானவராக இருந்த இவர், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் இருந்ததார். மேலும், பாஜக தமிழகத்தில் காலுன்ற முடியாது என்று வெளிப்படையாகவே பாஜகவை விமர்சித்திருந்தார். இதனால், அதிமுக தலைமையில் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.
ஏற்கெனவே, 2021 ஆம் ஆண்டில் பாஜக அதிமுக கூட்டணியில் இருந்தபோதே அதிருப்தியில் இவர் இருந்தநிலையில், அவருக்கு அப்போதே வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 2023-ம் ஆண்டு அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
தற்போது பாஜகவோடு மீண்டும் அதிமுக கூட்டணி வைத்திருக்கும்நிலையில், மீண்டும் அதிமுக தலைமைமீது அதிப்தியடைந்தார்.
இந்தநிலையில், இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அன்வர்ராஜா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.
இதற்கிடையில் அன்வர் ராஜா அறிவாலத்திற்கு சென்று, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தன்னை திமுகவில் இணைத்து கொண்டார்.