anwar raja aiadmk PT web
தமிழ்நாடு

பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.. அதிமுகவில் இருந்து வந்த அதிரடி குரல்!

பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது.. அதிமுகவில் இருந்து வந்த அதிரடி குரல் .. கூட்டணியில் முரண்.. என்னதான் நடக்கிறது?

Uvaram P

பாஜக - அதிமுக கூட்டணி ஒன்று சேர்ந்துவிட்டாலும், அது கள அளவில் ஒன்றிப்போகவில்லை என்ற விமர்சன நெடி அதிகமாக இருக்கும் நிலையில், பாஜகவால் ஒரு காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று பேசி இருக்கிறார் அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா. கூட்டணிக்குள் என்ன நடக்கிறது? அன்வர் ராஜா பேச்சின் பின்னணி என்ன? நடப்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

அமித்ஷா, இபிஎஸ், அன்வர் ராஜா

2026 தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக - பாஜக கூட்டணி ஒன்று சேர்ந்திருக்கிறது. கூட்டணியின் தலைமை ஒன்று சேர்ந்துவிட்டாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லை.. கூட்டணி இன்னும் மெர்ஜ் ஆகவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது ஒரு புறம் இருக்க, அமையப்போவது கூட்டணி ஆட்சி என்கின்றனர் பாஜக தலைவர்கள். ஆனால், அதிமுக தரப்போ, தனித்தே ஆட்சி அமைப்போம் என்று உறுதிபட தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்தான், கூட்டணி குறித்து விரிவாக பேசிய அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அப்போது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி என்று பாஜக நிர்பந்தித்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றவர், எந்த நிர்பந்தத்திற்கும் அதிமுக பணியாது உறுதிபட தெரிவித்துள்ளார்.

அதே நேரம், திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டில் காலுன்ற துடிக்கும் பாஜகவின் எண்ணம் ஒருக்காலும் நடக்காது.. இது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை நாளை முதல் தொடங்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், அன்வர் ராஜாவின் கருத்து கூட்டணி intact ஆகாததை காட்டுகிறதா என்ற கேள்வி எழுப்புகிறது. இதுதொடர்பாக அன்வர் ராஜாவிடம் தொடர்புகொண்டு பேசினோம். ஆனால், அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார். மேலும், அன்வர் ராஜாவின் கருத்து தொடர்பாக, அதிமுக மூத்த தலைவர்களிடம் விளக்கம் கேட்க முற்பட்டபோது, அவர்களும் விளக்கமளிக்க மருத்துவிட்டனர்.

அதிமுக - பாஜக

முன்னதாகவே, அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகள் இணைந்து தங்கள் கட்சிகளின் பலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பாஜகவை கடுமையாக விமர்சித்ததால் ஓரம் கட்டப்பட்டிருந்தார் அன்வர் ராஜா. இந்த நிலையில், தற்போதைய அவரது கருத்து தமிழக அரசியல் களத்தில் புது புயலை கிளப்பியுள்ளது.